Wednesday, November 25, 2009

அது நடந்து 37 வருடங்களாகியும் மாறவேயில்லை உலகம்..!

இந்தச் சிறுமி... இப்போது!

நன்றி அ.முத்துலிங்கம்

சில முக்கியமான சம்பவங்கள் நடக்கும்போது அந்தத் தருணம் படம் போல மனதிலே பதிந்துவிடும். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது நேருவின் உரை ரேடியோவில் ஒலிபரப்பானது. நான் அப்போது சிறுவன். எங்கள் கிராமத்தில் இருந்த ஒரே ஒரு ரேடியோ பெட்டியைச் சுற்றி 10, 15 பேர் நின்றார்கள். ஒன்றும் புரியாவிட்டாலும் அந்த இருட்டறையில் நானும் நின்றபடி கேட்டேன். அந்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி கென்னடியைச் சுட்டுக் கொன்றபோது, நான் ஒரு நூலகத்தில் அமர்ந்து சோதனைக்குத் தயாரித்துக்கொண்டு இருந்தேன். நான் மேசையில் எந்தப் பக்கத்தில், எந்தத் திசையை நோக்கி, என்ன புத்தகம் படித்தேன் என்பது இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது.

1972-ம் ஆண்டு ஒரு ஜூன் மாதம். எங்கள் வீட்டின் வெளித் திண்ணையில் ஒரு பிரம்புக் கதிரையில் அமர்ந்து நான் சாவதானமாக 'டைம்' வார இதழைப் புரட்டிக்கொண்டு இருந்தேன். அதிலே பார்த்த ஒரு புகைப்படம் என்னைத் திகைக்கவைத்தது. ஒரு சிறுமி நிர்வாணமாக கேமராவை நோக்கிக் கைகளை விரித்து, வாயை ஆவென்று திறந்துவைத்துக்கொண்டு, ஓடி வருகிறாள். அவளைச் சுற்றி இன்னும் பல குழந்தைகள். மனதை உலுக்கிய அந்தக் காட்சி இன்று வரை என் நினைவில் இருந்து அழியவில்லை.

வியட்கொங் படைகள் தராங்பாங் கிராமத்துக்குள் ஊடுருவிய தகவல் தென் கொரியப் படைகளுக்குக் கிடைக்கிறது. கிராம மக்களுக்கு முன்கூட்டியே ஆபத்து வரப்போவது தெரியும். அன்று மத்தியானம் சோற்றுக்கஞ்சி குடித்துவிட்டு, ஏதோ நடக்கப்போகிறது என்று மக்கள் காத்திருந்த சமயம், சிவப்புச் சிவப்பாக விமானத்தில் இருந்து திரவப் பொட்டுகள் விழுகின்றன. அவை குண்டுகள் அல்ல, எங்கே குண்டுகள் போட வேண்டும் என்பதை விமானம் அடையாளமிட்டுத் தீர்மானிக்கிறது. யாரோ கத்தினார்கள்... 'ஓடுங்கள் ஓடுங்கள்' என்று. எல்லாச் சிறுவர் - சிறுமியரும் ஓடத் தொடங்கினார்கள். 'டுப் டுப்' என்று நாலு சத்தம் மாத்திரம் கேட்கிறது. பெரிய குண்டு விழுந்து வெடிக்கும் சத்தமோ, நிலம் பிளக்கும் ஓசையோ இல்லை. நாப்பாம் குண்டுகள் அப்படித்தான், பெரிய சத்தம் எழுப்புவது இல்லை. ஓசை இல்லாமல் விழுந்து, விழுகிற இடத்தைத் தீப்பிழம்பாக மாற்றிவிடும்.

அந்தச் சிறுமி அணிந்திருந்த மெல்லிய பருத்தி ஆடை அப்படியே கணத்தில் எரிந்து பொசுங்கிவிட்டது. 'எரிகிறது... எரிகிறது' என்று கதறியபடி ஓடி வந்த சிறுமியைப் படம்பிடித்தவர் நிக் உட் என்ற புகைப்படக்காரர். அவர் சிறுமியை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார். அந்தச் சிறுமியின் பெயர் கிம் ஃபுக். போரின் கொடூரத்தை உணர்த்தும் அந்தப் படம் 12 ஜூன் 1972 டைம் இதழில் வெளியாகிறது. உடனே மற்ற பத்திரிகைகளும் படங்களை வெளியிட, உலகில் கோடிக்கணக்கானவர்கள் பார்க்கிறார்கள். 'படத்தில் இருக்கும் சிறுமி' என்று கிம் அறியப்பட்டார். படத்தை எடுத்த நிக் உட்டுக்கு புலிட்சர் பரிசு கிடைக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் அந்தப் படத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார். அது நிஜமானதுதானா என்று தன் உதவியாளரிடம் பலதடவை கேட்டுத் தெளிவுபெறுகிறார். அந்தப் படம் பிரசுரமான சில மாதங்களிலேயே பாரிஸில் வியட்நாம் போர் நிறுத்தப் பிரகடனம் கையப்பம் ஆகிறது.

மாரியம் பீச் என்ற பெண் மணி Uncle Tom's Cabin என்ற நாவலை எழுதினார். அமெரிக்காவில் அடிமைகளின் விடுதலைக்கு அந்த நூல் காரணமாக அமைந்து, ஒரு பெரிய போரே நடந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் ஒருமுறை மாரியமைச் சந்தித்தபோது 'இந்தச் சிறிய பெண்ணா அந்தப் பெரிய போரை ஆரம்பித்தவர்' என்று சொன்னாராம். அதுபோலவே வியட்நாம் போர் நிறுத்தத்துக்கு அந்தச் சிறுமியின் படம் முக்கியக் காரணம். என்றென்றைக்கும் உலகப் புகழ்பெற்ற புகைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இன்றைக்குச் சிறுமியின் பெயர் மறந்துவிட்டாலும் முகத்தைப் பலரும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். 'படத்தில் இருக்கும் சிறுமி' என்று சொன்னால் எல்லோருமே புரிந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் வாஸந்தியிடம் இந்தப் பெண்ணைச் சந்தித்ததைச் சொன்னபோது, அந்தப் பெண்ணுக்கு அந்த நாள் ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார். உடம்பு முழுக்க நெருப்புத் தழும்பைக் காவித் திரிபவர் எப்படி மறக்க முடியும்? கிம் இப்போது கனடாவில் குடிபெயர்ந்து வாழ்கிறார். 46 வயதான அவர் அரசு சாரா தொண்டு நிறுவனத்தை நடத்தி, உலகிலே போரில் பாதிக்கப்பட்ட சிறுவர் - சிறுமியருடைய நல்வாழ்வுக்காகப் பாடுபடுகிறார். இவருடைய தன்னலம் அற்ற சேவையைப் பாராட்டி, கனடிய அரசின் 'Order of Ontario' விருது இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. யோர்க் பல்கலைக்கழகம் Doctor of Law பட்டம் கொடுத்திருக்கிறது. அத்துடன் யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவராகவும் பணி ஆற்றுகிறார்.

ஒருநாள் அவரைச் சந்திக்க முடிந்தது. 37 வருடங்களுக்கு முன்னர் டைம் பத்திரிகையில் பார்த்த சிறுமியா இவர் என்ற வியப்பு ஏற்பட்டது. சதுரமான சிவப்பு முகத்தில் சிநேகமான கண்கள். செங்கல் நிற ஆடையும் சாம்பல் நிற மேலாடையும் அணிந்திருந்தார். சின்னப் பாதங்களில் ஒரு சீனப் பெண்போலத் தள்ளாட்டமாக நடந்துவந்தது அவருக்கு ஒரு வசீகரத்தைக் கொடுத்தது. கைப்பையை நாற்காலியில் மாட்டிவிட்டு, கால்களை நீட்டி சாவதானமாகச் சாய்ந்து உட்கார்ந்து சிரித்தபடியே பேசினார். இவரா அந்தச் சிறுமி என்ற திகைப்பு அடங்கச் சில நிமிடங்கள் எடுத்தன. எங்கே தொடங்குவது என்று தெரியவில்லை. இதற்கு முன்னர் அவரிடம் நூறு பேர் கேட்டிருக்கக்கூடிய ஒரு கேள்வியைக் கேட்டேன். ''நீங்கள் எரிந்துகொண்டு ஓடியபோது எப்படி உணர்ந்தீர்கள்?''

''அந்தச் சிறு வயதிலும் உயிரின் மேல் இருக்கும் ஆசை தெரிந்தது. அது தவிர, உடம்பு பற்றி எரியும் வேதனை. அப்படியே ஓடிக்கொண்டு இருக்க வேண்டும் என்று தோன்றியது. வெகுதூரத்தைக் கடந்துவிட்டால் வலி போய்விடும் என்று நினைத்தேன்.''

''சிகிச்சையில் உங்களுக்குப் பூரண குணம் கிடைக்கவில்லையா?''

''நான் நீண்ட காலத்தை மருத்துவமனைக் கட்டில்களில் கழித்தேன். 14 மாதங்களில் என் உடம்பில் 17 அறுவை சிகிச்சைகள் செய்தார்கள். அது ஒரு அமெரிக்கர் நடத்திவந்த மருத்துவமனை. அங்கே வேலை செய்த மருத்துவர்களும் தாதிகளும் கனிவுடனும் சேவை மனப்பான்மையுடனும் சுறுசுறுப்பாக வேலை செய்வதைக் கண்டேன். அவர்களிடம் எனக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது. நான் வளர்ந்து பெரியவளாகும்போது எப்படியும் படித்து மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டேன். ஆனால், விதி என்னைத் துரத்தியது. என் பதின்ம வயதில் மருத்துவப் படிப்பைத் தொடங்கினேன். ஆனால், நான்தான் 'படத்தில் இருக்கும் சிறுமி' என்பதை வியட்நாமிய கம்யூனிஸ்ட் அரசு கண்டுபிடித்தது. என்னுடைய படிப்பை நிறுத்தி, என்னைப் பரப்புரை செய்யும் அரசு ஊழியராக நியமித்தது. என் விருப்பத்தைக் கேட்காமலே நான் காட்சிப் பொருள் ஆக்கப்பட்டேன்.''

''அதிலிருந்து எப்படி மீண்டீர்கள்?''

''எரிந்து தழும்பேறிய என் உடம்பைக் கண்ணாடியில் பார்க்க எனக்கே அருவருப்பாகவும், அவமானமாகவும் இருக்கும். படிக்க முடியாத கவலை வேறு எனக்கு. உடம்பில் 24 மணி நேரமும் ஓயாத வலி. ஒருநாள் திறந்தவெளியில் நின்று அண்ணாந்து வானத்தைப் பார்த்து உரத்துக் கத்தினேன். 'ஏன் நான்? ஏன் நான்? என்னை ஏன் தெரிவுசெய்தாய் ஆண்டவனே? நீ அங்கே இருப்பது உண்மையானால், என்னை வாழவிடு அல்லது சாகவிடு.' அதன் பின்னர் என்ன நடந்ததோ தெரியாது. படிப்படியாக என் வாழ்க்கை மாற்றமடைய ஆரம்பித்தது. என் அம்மா சொல்லும் வியட்நாமியப் பழமொழியை நினைத்துக்கொள்வேன். ஒரு முழு யானையைச் சாப்பிட நினைப்பவள், முதலில் ஒரு வாய் உணவில் ஆரம்பிக்க வேண்டும். வேதனையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க வேண்டும். ஓர் இரவில் அது மறைந்துபோகாது. எனக்குக் கிடைத்த ஒவ்வொரு நாளும் ஒரு கொடை என்பதை உணர்ந்தேன். நடந்து முடிந்த சரித்திரத்தை நான் மாற்ற முடியாது. ஆனால், இனி வரும் சரித்திரத்தை என்னால் மாற்ற முடியும்.'

''எப்படி கனடா வந்தீர்கள்?''

''கியூபாவில் மேற்படிப்பு படிக்க எனக்கு அனுமதி கிடைத்தது. அங்கே எனக்கும் இன்னொரு வியட்நாமிய மாணவனுக்கும் இடையில் காதல் முகிழ்த்தது. நான் படிப்பை இடை நிறுத்தி அவரை மணமுடித்தேன். எங்கள் தேனிலவைக் கொண்டாட ரஷ்யாவுக்குச் சென்றோம். திரும்பி வரும் வழியில் எங்கள் விமானம் கனடாவின் காண்டர் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக இறங்கியது. அந்த நேரம் நானும் என் கணவரும் அரசியல் தஞ்சம் கோரினோம். அன்று விமானத்தில் எரிபொருள் போதிய அளவு இருந்திருந்தால் இன்று நான் கனடாவில் சுதந்திரமான காற்றைச் சுவாசிக்க மாட்டேன்.''

''நீங்கள் கனடா வந்த பின்னர், உங்கள் பழைய வாழ்க்கையை நினைவூட்டும் யாரையாவது மீண்டும் சந்தித்தீர்களா?''

''ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரத்தில் 1996-ம் ஆண்டு நடந்த Viet-nam War memorial விழாவில் என்னைப் பேச அழைத்திருந்தார்கள். நான் என் பழைய வலிகளையும், துயரங்களையும் சபையினருடன் பகிர்ந்துகொண்டேன். விழா முடிந்த பின்னர், முன்னை நாள் அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் என்னை வந்து சந்தித்தார். அவருடைய பெயர் ஜான் ப்ளம்மர். அன்று நாலு நாப்பாம் குண்டுகளையும் வீசிய விமானத்தின் கட்டளை அதிகாரி. அவர் கண்களில் நீர் வழிந்துகொண்டு இருந்தது. என்னைக் கட்டி அணைத்து, 'நீ என்னை மன்னித்துவிட்டாயா?' என்று கேட்டார். 'உங்களையும் குண்டுபோட்ட விமானியையும் நான் மன்னித்துவிட்டேன்' என்றேன்.''

''நீங்கள் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறீர்கள். சமீபத்தில் நடந்து முடிந்த ஈழத்துப் போரில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர்; காணாமல் போயினர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் காயம்பட்டனர். கர்ப்பத்தில் இருந்த சிசுகூடக் காயம் அடைந்திருக்கிறது. போரின் நடுவில் விஸ்வமடுவில் பிறந்த ஒரு குழந்தையின் வலது தொடையில் துப்பாக்கிச் சன்னக் காயம் இருந்ததைப் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். நீங்கள் இலங்கைக்குப் போகத் திட்டமிடவில்லையா?''

மேசையில் கிடந்த கரண்டியை கிம் சுழலவிட்டு அது நிற்கும் வரை காத்திருந்தார். அவருடைய கண்கள் கலங்கின. ''நான் தனியாளாக வேலை செய்கிறேன். சமீபத்தில் நான் உகாண்டா, கானா, தாய்லாந்து, மெக்சிகோ, ஆர்ஜென்டினா, அயர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம் போன்ற பல நாடுகளுக்குப் போயிருக்கிறேன். நான் பயணம் செய்த நாடுகளைவிட, இனி பார்க்கப் போகத் திட்டமிட்டு இருக்கும் நாடுகள் அதிகம். ஆனால், என் உடல்நிலை ஒத்துழைக்க வேண்டும்.'' அவர் தன் ஆடையின் கைகளைச் சுருட்டிச் சுருட்டி மேலே தள்ளிவிட்டு, ''இதைப் பாருங்கள்'' என்றார். நான் திடுக்கிட்டுவிட்டேன். அது மனிதக் கை போலவே இல்லை. உருகிய சதை எல்லாம் ஒன்றாகத் திரண்டு உருவம் இல்லாமல் தட்டையாக மினுங்கிக்கொண்டு கிடந்தது. ''தொட்டுப் பாருங்கள்'' என்றார். தொட்டேன். ஒரு மரக் கட்டையைத் தீண்டியதுபோல கையை உடனே இழுத்துக்கொண்டேன். ஒரு பெண்ணின் உடலில் காணக்கூடிய சதைத்தன்மையோ, மிருதுத்தன்மையோ இல்லை. 'என் உடம்பில் 65 சதவிகிதம் இப்படித்தான். சருமம் உருகி ஒட்டிக்கொண்டதால் சருமத் துளைகள் இல்லை; வியர்வையும் வெளியேற முடியாது. உணர்ச்சி நரம்புகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதால் உடம்பின் எந்தப் பாகம் வலித்தாலும் அந்த வலி உடம்பு முழுக்கப் பரவும். என் கால் பெருவிரலில் ஒரு காயம் ஏற்பட்டால், அந்தச் செய்தி மூளைக்கு நேராகப் போவதில்லை. உடம்பின் பல பாகங்களில் இருந்தும் போகிறது. அதனால் உடம்பு முழுவதும் வலிக்கும் உணர்வு ஏற்படுகிறது. மனித குலத்தின் பாவங்களை ஏற்று இயேசு சிலுவையில் மரித்ததுபோல உலகத்துக் குழந்தைகளின் வேதனையை நான் அனுபவிப்பதாகவே நினைத்துக்கொள்கிறேன்.''

''இத்தனை வருடங்களாகியும் வலி நிற்கவில்லையா?''

''என் உடம்பு எரிவதைத் தாங்க முடியாமல் நான் அலறிக்கொண்டு ஓடியபோது ஒரு ராணுவவீரர் என் மேல் தண்ணீரை ஊற்றினார். அவர் அப்படிச் செய்திருக்கக் கூடாது. தண்ணீர் கொதிப்பது 100 டிகிரி. நாப்பாம் குண்டு எரிவது 1,200 டிகிரி. நாப்பாம் குண்டில் பெட்ரோல், நாப்தலீன் அத் துடன் தோலிலே ஒட்டும் தன்மைகொண்ட ஒருவகைத் திரவம் கலந்திருக்கும். சருமத்தை ஒட்டிப் பிடித்து எரியும்போது அதை நிறுத்த முடியாது. தண்ணீர் ஊற்றியதும் சதை வெந்து காய்ச்சிய இறைச்சிபோல ஆகிவிட்டது.''- சட்டைக் கைகளை மறுபடியும் இறக்கிவிட்டு, கைப்பையை எடுத்துக்கொண்டு கிம் கனிவுடன் என்னைப் பார்த்தார்.

முதல் நாள் இரவு உதிர்ந்த மேப்பிள் இலைகளின் மேல் நடந்து சற்றுத் தூரம் சென்றவர், தன் சதுர மான முகத்தைத் திருப்பி கையை உயர்த்திக் காட்டி அசைத்தார். கேமராவை நோக்கி ஓடிவந்த சிறுமியும், இன்று என்னிடம் விடைபெற்று நாளைக்குள் நுழையும் பெண்ணும் ஒருவரேதான். மாற்றம் 37 வருடங்கள். மாற்றம் இல்லாதது இன்றைக்கும் உலகத்தில் போரில் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான குழந்தைகள்!

1 comment:

நிறையவே திட்டவேணும்போல இருக்கும்... இருப்பினும் அவையடக்கமாய் ஒரு சில வார்த்தைகள் கிறுக்குங்கள்.